நான் நினைத்ததுபோலவே, ஷோபாசக்தி என்னையும் போகின்றபோக்கில் இழுத்திருக்கின்றார். அதாவது..."இதே வேண்டுகோளை முன்னர் XXXXமும் டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன். ". (http://www.facebook.com/notes/shoba-sakthi/valarmatikku-en-sopa-patil-colvatillai/499180577910 and I was tagged by shoba) உண்மையில் எனக்குச் ஷோபாவிடம் கேள்வி கேட்கவேண்டுமென்கின்ற முற்பிறப்பின் பயன் ஏதுமில்லை.அவ்வாறு கேட்காமல் தூங்கினால் எனக்கு நித்திரை வராமற்போகும் என்பதுமில்லை. அதுபோல என் கேள்விகளை காணாவிட்டால் ஷோபாவுக்கு இந்தியாவிற்கான பிளைட் ரிக்கேட் கொடுக்கமாட்டார்கள் என்பதுமில்லை. பிறகேன் அவர் என்னை வம்புக்கு இழுக்கிறார்?)
இப்போது பிளாஷ்பேக்...
இலங்கை சர்வதேச மாநாட்டை ஒட்டி அறிக்கைகள் அறம்புறமாய்த் திரிந்துகொண்டிருந்த அலுப்பில் 'அறிக்கை எத்தனை அரிக்கையடா' என எனக்கு அட்டமத்துச்சனி வந்துநின்ற பொழுதில் எழுதப்போக அது நீண்டு நான் 'ஷோபாவிற்கான பின்னூட்டம்' என இதை (http://www.facebook.com/notes/dse-tamilan/sopavirku-elutiya-pinnuttam/169903003037863) எழுதவேண்டிவந்தது. அதில் முதற்கேள்வியாக ஷோபா முன்வைத்த ..."Shoba Sakthi :சரி நண்பா நீங்கள் இங்கே வைத்துள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவோம். நான் பதில் சொவல்வதில்லை என்ற விசயம் குறித்தும் பேசுவோம். முதலில் நீங்கள் கொழும்பில் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஏனெனில் விவாதம் இதைக் குறித்ததுதானே! பின்பு மிகுதி நியாயத்தைப் பேசுவோம்." என்பதை ஒரு சவாலாக எடுத்து நானும் என் கை அரிக்க அரிக்க ஒரு 'அரிக்கையை' எழுதினேன் (http://www.facebook.com/notes/dse-tamilan/marrai-munvaittal/170262303001933). அதற்கு முதற்கையெழுத்தாக ஷோபாவும் இடுவதாகக் கூறியது ஓரு நினைவூட்டல். பிறகு இருவரும் மவுனத்தால் 'பகை மறப்பு'ச் செய்திருந்தோம்.
அதேசமயம், 'ஷோபாவிற்கான பின்னூட்டம்' கட்டுரையில் ஒரு விவாதம் நண்பர்களிடையே போனது. எனது நேரமின்மை மற்றும் அக்கறையுமின்மை காரணமாக நான் அங்கு பங்குபெறவில்லை. ஆகவேதான் ஒரு பின்னூட்டம் கூட அந்தப் பதிவில் எழுதவில்லை. எனினும் ஷோபாவின் நளினமான உரையாடல் திறமை தெரியும் என்பதால் (இவ்வளவு காலம் ஷோபாவைப் பார்க்கிறேன். அதுகூடத் தெரியாதா என்ன?) இவ்வாறு அந்தக்கட்டுரையின் இறுதியில் எழுதினேன்..."எனக்குத் தெரியும் இதற்கும் நீங்கள் வெட்டி ஒட்டிக் கேள்வி கேட்பீர்கள் என்று. பரவாயில்லை. ஆனால் எனக்கு உடனே பதில் சொல்ல முடியுமோ தெரியவில்லை. அவ்வாறு எதுவும் எழுதாவிட்டால் 'காணாமற்போய்விட்டான்/ தலைமறைவாகிவிட்டான்' என யமுனாவிற்குச் செய்ததைப் போல மட்டும் செய்துவிடாதீர்கள், நேரம் வாய்க்கும்போது அதற்கும் பதில் சொல்வேன்"
நான் முன்னர் எச்சரிக்கையாக எழுதியது இப்போது நிகழ்ந்திருக்கின்றது. 'டிசேயிடம் கேட்டேன், அவர் அதைச் செய்யவில்லை' என்கின்றார் ஷோபா. ஆக, இதன் மறைபொருள் நான் தெகிரியமாகச் சிங்கிள் சிங்கமாய் நின்று கேட்டும் டிசே போன்ற தூசிகள் எல்லாம் பயத்தில் ஓடிவிட்டாங்கள் எனவும் விரும்பினால் வாசிக்கலாம். உண்மையில் அந்த உரையாடலைத் தொடர விருப்பமில்லை. எனெனில் ஷோபா குறுக்குமறுக்குமாய் மறித்து தாச்சி விளையாடி... எப்படி என்றால் ஆவது அளாப்பி 'சிங்கம் வென்றது' என்று மார்தட்டுவார் எனபது நன்கு தெரியும். தோல்விதான் என ஏற்கனவே தெரிந்த முடிவுக்காய், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பாதையில் போய் என்ன பிரயோசனம்? நான் என்ன கைப்புள்ளயா என்ன? வடிவேலுக்காவது அடிவாங்குகிற அளவுக்கு படங்களில் காசு கொடுகின்றனர். நான் இப்படி அடிவாங்க ஷோபாவா எனக்கு காசு அனுப்புவார்?
இந்தாருங்கள் ஷோபா உங்களுக்கு வெற்றி என அவருக்குக்கேடயத்தை இப்போதே மனமுவந்து கொடுத்துவிடுகின்றேன். ஏன் கிண்ணத்துக்குப் பதிலாய் கேடயம் கொடுக்கின்றேன் என்றால் ஷோபா ஒரு சிங்கம். அவருக்கு கேடயம் கொடுத்தால் அதைக் கவசமாய் நெஞ்சில் அணிந்துகொண்டு அடுத்த போர்க்களத்துக்குச் சென்று வெற்றி வாகை சூடுவார். அந்தப் பெருமிதத்ததால் என்னை மாதிரியான கைப்புள்ளகளையும் மறந்துவிடுவார். நானும் என்பாட்டில் நிம்மதியாக இருக்கலாம்.
இவ்வாறுதான் சற்றுமுன்னர்வரை இருந்தேன். இருந்தும் ஒரேயொரு கவலைமட்டும் வந்தது. நாளை நான் மண்டையை போடும்போது ஷோபாவோ அல்லது அவரது இரசிகர்களோ என் கல்லறைக்கு முன் நின்று, கேளடா கேளடா என ஷோபாசக்தி நெஞ்சை நிமிர்த்திக் கேட்டும், இவன் ஷோபாவிடம் கேள்வி கேட்காது தப்பியோடிய கோழை' எனச் சபிக்கமாட்டார்களா என்ன? (புனை)பெயரிலை 'தமிழன்' என்ற பெயரை வைத்துக்கொண்டு 'கோழை'யாய்ச் செத்தால் அது முழுத்தமிழ் இனத்துக்குமே அவமானம் அல்லவா?
ஆகவே சில கேள்விகளை சும்மா ஒப்புக்காய் எழுதிவிடுகின்றேன். தயவுசெய்து இனிவருங்காலங்களில் ஷோபா, 'இதே வேண்டுகோளை முன்னர் XXXXXமும் டிசேயிடமும் வைத்தேன் ' என்று சொல்கின்றபோது எனது பெயரை அகற்றி பெரும் வரலாற்றுக் கறையிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேண்டுமானால், இதே வேண்டுகோளை முன்னர் டிசேயிடம் வைத்தேன். அவர் ஒரு வாலிழந்த பல்லிபோலக் கேள்விகள் கேட்டார். நான் செத்த பாம்புக்கு அடிகின்றமாதிரி அவரது கேள்விகளுக்குச் சுழன்று சுழன்று பதில் அளித்து சும்மா தூவென எல்லாவற்றையும் ஊதித்தள்ளிவிட்டேன்' என எழுதவேண்டுமென இறைஞ்சிக் கேட்கின்றேன்.. 'நான் யார் வாத்தியாரின் இரசிகன்' என்று ஷோபா முடிவுரை எழுதும் சந்தர்ப்பம் வந்தால், டிசே அசினின் அடிமை' எனத் குறிப்பிடவும் தயவுசெய்து மறக்கவேண்டாம்.
இனிச் சும்மா வரலாற்றுப் பழியிலிருந்து தப்புவதற்காய் சும்மா சாட்டுக் கேள்விகள்...
(ஸ்டார்ட்டு மியூசிக்...இப்போது ஷோபா தன் ஆட்டத்தை ஆடுவார்...)
(1) எக்ஸிலில் வந்த விளம்பரங்களைக் கண்டித்து 'அறம்' பாடிய நீங்கள், எந்த 'அறத்தின்பாற்பட்டு' பெருநிறுவனங்கள் நடத்தும் தீராநதி, இந்தியா ரூடே, விகடன் போன்றவற்றிற்கு பேட்டி கொடுத்தீர்கள்/எழுதச் செய்தீர்கள்?
(மேலதிக விளக்கம்: கற்சுறாவின் ஃபேஸ்புக்கில் உள்ளது)
(2) வால்பாறையில் நடந்த கூட்டத்தில் ம.மதிவண்ணன் தலித் என்பதற்காய் அவமானப்பட்டதை சுகிர்தராணி இங்கே (http://padamkadal.blogspot.com/2009/08/blog-post_12.html) பதிவு செய்திருக்கின்றார். நானறிந்தவரை அந்நிகழ்வில் பங்குபற்றிய அ.மார்க்ஸோ அல்லது நமது புகலிட 'தலித்தியத்தோழர்' சுகனோ இது குறித்து எதையும் பதிவு செய்ததாக அறியவில்லை? இவை குறித்து விரிவாக அறிந்திருக்கக்கூடிய 'தலித்தியப் போராளியான' நீங்கள் இதைப் பற்றியும் எங்கும் பதிவு செய்ததாகவும் இல்லை. அது ஏன்? காலம் கடந்தபின்பாயினும் சுகிர்தராணியின் கட்டுரைக்கான உங்கள் பதில் என்ன?
(3) அருந்ததிரோய் உயிர்மை கொடுத்த முற்பணத்தைத் திரும்பிக்கொடுக்கவில்லை என்பதற்காய் ஒரு ஸ்டேட்டஸ் செய்தி விடுகின்றீர்கள். நல்ல விடயமே. நமக்கான சார்புகளைத்தாண்டி பாதிக்கப்பட்டவருக்காய் நாம் குரல் எழுப்பவேண்டுந்தான். ஆனால் இதே உயிர்மைதான் மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு' விடயத்தில் தம் வியாபார முகத்தைக் காட்டியது என 2-3 மூன்று இடங்களில் பதிவு செய்திருந்தேன். அண்மையில் கருணாகரனுக்குக் கூட அதே பதிலைக் கூறியிருந்தேன். அந்த விடயத்துக்கு ஏன் எதுவுமே கூறவில்லை? அருந்ததிரோய் ரேஞ்சில் மட்டுந்தான் பேசுவீர்களா? என் பல்லி மூளையோ, எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என சொல்கிறது. அஃது உண்மைதானா?
(4) 50, 000 ரூபாயை அருந்ததி ரோய் திரும்பிக்கொடுக்காமல் இருப்பது 'நேர்மையற்றது' என்கின்ற முடிவுக்கு வருகின்றீர்கள். நல்லதே. உங்களிடம் இன்னுமிரு நண்பர்களிடமும் தமிழகத்தில் இருந்து X எனும் நண்பர் 50 நூற்களை விமானத்தில் அனுப்பி வைக்கின்றார். அந்நூலின் விலை கனடாவிலேயே 30 டொலருக்குத்தான் விற்கப்படுகின்றது. ஆக 50 * 30 = 1500 டொலர்ஸ் + விமானச் செலவு. ஒரு கனடியன் டொலர் = 40 இந்திய ரூபாய் என்றாலே. அனுப்பிய புத்தகங்கள் மட்டுமே
60, 000 ரூபாய் வரும். விமானச் செலவை விடுவோம். அவை தடிமனான புத்தகங்கள். அந்த எக்ஸ் நண்பர் நீங்கள் அந்தச் செலவை அனுப்பவில்லை என என்னிடம் நேரடியாகச் சொன்னார். உங்களிடம் கேட்டால், அந்த நூலை எழுதியவர் எமது 'வளர்ப்புத் தந்தை' போன்றவர் எனக் கூறி தப்பிவிடுகின்றீர்கள் என்றும் கூறுகின்றார். (வாசிக்கும் மற்றவர்களுக்கு சார்பு நிலை வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காய்..., இதைச் சொன்னவர் வளர்மதி இல்லை எனவும் கூறிவிடுகின்றேன்). ஆக, 50, 000 ரூபாய் நீங்கள் அந்த நண்பருக்கு கொடுக்க வேண்டியிருக்கிறதல்லவா? அருந்ததிரோயின் நேர்மையற்றதனத்தைக் கண்டிக்கும் நீங்கள் இதுகுறித்து ஏன் உங்கள் மனச்சாட்சியின் நேர்மையைக் கேள்விகேட்கவில்லையா?
(5) கறுப்பு தொகுப்பில் அலன் சோகலின் மோசடிக் கட்டுரையைப் பிரசுரித்திருக்கின்றீர்கள். அது குறித்து வெளிப்படையாக நீங்கள் எழுதியிருக்கின்றீர்களா? 'கறுப்பு' வாங்கி வாசிக்கும் வாசகர்களிடம் இதற்காய் மன்னிப்புக் கேட்டிருக்கின்றீர்களா? (இதேயிடத்தில் ஒன்றைக் கூறவேண்டும், இந்தக் கட்டுரையை மட்டும் வைத்து உங்களோடும் அ.மார்க்சோடும் இருக்கும் பகையால் காலச்சுவடு கண்ணன் முழுத்தொகுப்பை நிராகரித்தபோது, ரோசாவசந்த், திண்ணைதூங்கி உட்பட நான் வரை உங்களுக்கு ஆதரவாகவே பதிவுகள் தளத்தில் பேசினோம் என்பதையும் ஒருகுறிப்புக்காய் கூறிக்கொள்கிறேன்)
(6) சனதருமபோதினியில் சாருவின் 'உன்னதசங்கீதம்' எந்த அடிப்படையில் பிரசுரிக்கப்பட்டது? தொகுப்பாளர் என்றவகையில் அந்தக் கதை குறித்து உங்களுக்கு என்ன அபிப்பிராயம் உண்டு?
(7) இன்று இலங்கையில் நடைபெறும் சர்வதேச இலங்கை எழுத்தாளர் மாநாடு, காலி எழுத்தாளர் மாநாடு என எல்லாவற்றுக்கும் ஓடி ஓடிப்போய் கையெழுத்து இடுகின்றீர்கள். நண்பர்களுக்கு அனுப்பி ஆதரவும் கேட்கின்றீர்கள். உங்களது அரசியலைத் தெளிவாக வைப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. எனது கேள்வி என்னவென்றால் ஒரு பேச்சுக்கு இலங்கை அரசுக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் போரில் வெற்றி பெற்று அவர்கள் தனிநாடும் அடைந்திருந்தால் இதேமாதிரிதான் செயற்பட்டிருப்பீர்களா? அப்படித்தான் செயல்பட்டிருப்பீர்கள் என்பதை உங்களின் 'நான் புலிகளை 100% எதிர்க்கிறேன். இலங்கை அரசை 200% எதிர்க்கிறேன்' என்ற கோசமும் வலுச்சேர்க்கிறது. எனெனில் 200% எதிர்ப்பைச் செய்வதாகச் சொன்ன அரசு அதிகாரம் செலுத்தும் நிலத்திலே இப்படி உங்களின் 'ஆதரவுத்தளம்' செயற்படும்போது, 100% எதிர்ப்பைக் காட்டிய புலிகள் வென்றிருந்தால் இன்னும் நிறைய ஆதரவு கொடுத்திருப்பீர்கள் என்பதே யதார்த்தமாகும். அப்படியாயின் புலிகள் செய்த எல்லாவற்றையும் மறந்து பகை மறப்பும் மீள் நல்லிணக்கமும் மக்களைக் காரணங்காட்டி செய்யச் சொல்லும் அ.மார்க்ஸ் போல நீங்களும் கூறுவீர்களா?
இப்போது சிங்களத் தேசியக்கொடிக்கு ஆதரவுக்கோசம் போடும் ஹரி ராசலட்சுமி அப்போது புலிக்கொடிக்கு போட்டிருப்பாரா (இக்கேள்விக்கு மட்டும் ஹரி பதில் சொல்லலாம்)
(8) பத்மநாப அய்யரை அவரின் பெயரில் 'அய்யர்' இருக்கின்றது என்ற ஒரு காரணத்தை வைத்தே நீங்கள் எல்லாம் செத்த பாம்புக்கு அடிப்பதுபோல அவரைச் சாடுனீர்கள் (இங்கே எனக்கு அய்யரோடு தனிப்பட்ட நெருங்கிய பரிட்சயம் என்ற முடிவுக்குவந்துவிடக்கூடாது). கனடாவுக்கு வந்த பலமுறைகளில் ஒரேயொரு முறை மட்டுமே அவரைச் சந்தித்திருக்கின்றேன்). நானறிந்தவரை அய்யர் தான் ஒரு பிரமாண சாதியில் பிறந்ததை முன்வைத்து எவரையும் ஒடுக்கியதாகவோ ஒதுக்கியதாகவோ கேள்விப்பட்டதில்லை. எவரும் அப்படி எழுதியும் வாசித்ததுமில்லை. நீங்கள் இவ்வளவு கிழித்தும் உங்கள் தொகுப்புக்கள்/படைப்புக்களை தானே வாங்கி அய்யர் தன் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதுவல்ல என் கேள்வி. நீங்கள் உங்கள் சத்தியக்கடதாசியில் ஹரி தனது முழுப்பெயருடன் எழுதிய மத்தியகல்லூரி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தீர்கள். ஹரிக்கும் அவரது பின்னால் வரக்கூடிய பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததுபோலவே பத்மநாப அய்யரும் இருக்கின்றார். சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல? அய்யர் என்ற பெயர் இருப்பதால் மட்டுமே பத்மநாப அய்யரோடு தேவையில்லாமல் தனவிய நீங்கள் எப்படி ஹரியின் முழுப்பெயரோடு உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கச் செய்தீர்கள்? இதற்குப் பெயர் தான் நேர்மையா? அறமா?
(9) தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.
(10) நீங்கள் ரயாகரன், கலாமோகன் உட்பட யமுனா ராஜேந்திரன் வரை விடாது துரத்தி அவர்களை 'அம்பலத்தியிருக்கின்றீர்கள்'. ஆனால் இன்று சுகன் தான் கூறியவற்றுக்கு மாறாய் நடந்துகொண்டிருப்பதை (அண்மையில் பானுபாரதியும் தன் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கின்றார்) பார்த்துக்கொண்டிருந்தும் நீங்கள் ஏன் ஒரு கட்டுரை எழுதவில்லை (ஒரேயொரு கட்டுரை சுடப்படும் இளைஞர் பற்றிய சுகனின் புரட்டுக்கதையைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்) நான் கேட்பது சுகனின் கோட்பாடு/அரசியல் சரிவுகளை முன்வைத்து ஒரு கட்டுரை ஏன் இதுவரை எழுதவில்லை?
(11) அனைவருக்குமான திறந்த உரையாடல்கள் என்பது இணையத்தில் முக்கியமானது. நமது இயக்கங்கள் அனைத்தும் அவ்வாறில்லாததால் தம்மில் தாமே மண்ணை அள்ளிப்போட்டது மட்டுமில்லாது அவர்களை நம்பிய மக்கள் மீதும் மண்ணை அள்ளிப்போட்டார்கள். 'சனநாயக வெளி' பற்றி அக்கறையுள்ள நீங்கள் ஏன் பின்னூட்டங்களை தடுத்தீர்கள்? வளர்மதி தனது பின்னூட்டங்கள் தடுக்கப்பட்டதென்கிறார். ரஃபேலும் அதைக் குறிப்பிடுகின்றார். வேறு சிலரும் முன்னர் அவ்வாறு கூறியதாக நினைவு. பெயர்கள் சரியாக நினைவுமில்லை. நீங்கள் சத்தியக்கடதாசியிலிருந்து ஷோபாசக்தி டொட் கொம் ற்குப் போனபோதும் நீண்டகாலமாய் பின்னூட்டப்பகுதி மூடப்பட்டே இருந்தது. ஆக இதுவும் சனநாயக வெளி என்கின்றீர்களா? இப்போது பேஸ்புக்கிலும் அதைத் தொடர்கின்றீர்கள். உங்களைச் சீண்டுகின்றார்கள் என்பதற்காய் அவர்களை அகற்றுகின்றீர்கள். இணையம் போன்ற வெளியிலேயே எம்மால் சகிப்புத்தன்மையும், எல்லோரையும் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கும்போது, எங்களைப் போன்றவர்கள் சனங்களை முன்னிட்டு அரசியலோ அல்லது இலக்கியந்தான் பேசமுடியும் என நம்புகின்றீர்களா? சனத்தோடு புழங்கும் வெளியில் இதேபோன்ற் ஆட்கள் எரிச்சலூட்டும்போது கிடைக்கும் தும்புக்கட்டையாலோ அல்லது துவக்காலோ போடாமல் விடமாட்டோம் என்பது என்ன நிச்சயம்? ஆக இணையத்திலேயே சகிப்புத்தன்மை இல்லாத நாங்கள் சனங்களுக்கான அரசியலோ எதுவோ பேசுவதென்பது சுத்த பம்மாத்துதான் என்கின்றேன். ஆமா/இல்லையா என்பதை ஒற்றைவரியில்லாது விளக்கத்துடன் தரவும்.
(12) இக்கேள்வியை பொதுவெளியில் வைக்க விருப்பமில்லை (டிசே)
(13) சாதியம் குறித்து... நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டமாதிரி எங்களுக்கு ஓர் பெரியாரோ அம்பேத்காரோ அயோத்திதாசரோ நாராயணகுருவோ இல்லாதுபோனது சாபமே. ஆனால் இவர்களைப் போன்ற பலரும் இருந்துகூட இன்னமும் இந்தியாவில் சாதியம் வீரியமாகவே இருக்கின்றது. அண்மையில் கூட ஆதவன் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். புலிகளின் காலத்தில் சாதி ஒழிப்பு நடைபெறவில்லை என்பதுவும் உண்மையே. ஆனால் சாதி நாசூக்காய் மறைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் பொதுவெளியில் பலர் தம் சாதித்திமிரைக் காட்டத் தயக்கமிருந்தது. எனெனில் புலிகளால் தண்டனை கொடுக்கப்படுமென்று.
அண்மையில் தேவதாசன் பதிவுசெய்த விடீயோவில் கோயிலில் ஒரே இடத்தில் பொங்கிப்படைப்பதை தலித்துக்களும் இருக்கின்றார்கள் என்பதால் ஆதிக்க சாதி தனிக்கொட்டில் போட்டுப் பொங்க அதை உடைத்ததலித்துக்களை பொலிஸ் கைதுசெய்திருக்கின்றது. புலிகளிடம் இருக்கும் துவக்குப் பயத்தால் இவ்வாறு தனியே கொட்டில்போட்டுப் பொங்க ஆதிக்கசாதியினர் போயிருக்கமாட்டார்கள் என ஒருவர் ஒரு வாதத்தை வைக்கின்றார் என வைப்போம். அதாவது அவர் புலிகளின் காலத்தில் இருப்பதைவிட இப்போது சாதித்திமிரும் ஒடுக்குமுறைகளும் அதிகம் என முடிவுக்கு வருகிறார் என்றால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்? இப்போதைய சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எவ்வாறான போராட்டங்களை முன்வைப்பீர்கள்.?
(14) எதிர்காலத்தில் ஈழத்தில் முன்னால் புலிகள் ஒரு அரசியல் கட்சியாக பரிணாமித்து, தமிழ்ப்பிரதேசங்களில் முக்கிய கட்சியாக மாறுகின்றனர் என வைப்போம். அரசியலில் பலம் பெறுகின்ற அவர்கள் இலங்கை அரசிடமும், உலகிடமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியும் (விரும்பினால் பிரிந்துபோகின்ற உரிமையும் தரவேண்டுமென) ஒரு பொதுசன வாக்கெடுப்பைக் கேட்கின்றார்கள் என வைப்போம். அவ்வாக்கெடுப்பில் அங்குள்ள மக்கள் தனிநாட்டுக்கு ஆதரிக்கின்றார் என (சும்மா ஒரு ஆசைக்குத்தான்) வைப்போம். ஆனால் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிகிறது. தனிநாடு வந்தால் அது எப்படி முன்னர் புலிகளின் ஆட்சி இருந்ததோ அதே பிரின்சிப்பல்கள் பின்பற்றப்படுமென்று. நீங்கள் மக்களின் முடிவுக்கு தலைசாய்த்து புதிய நாட்டை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது புலிகளின் மிச்சங்கள் இன்னும் இருக்கின்றது என்பதற்காய் எதிர்ப்பீர்களா (இந்தக்கேள்விக்கு hint: இப்போது மக்களைக்காரணங்காட்டித்தான் எல்லா இடங்களிலும் ஓடி ஓடிக் கையெழுத்திடுகின்றீர்கள்...மக்களின் முன் மகிந்தா ஒரு பொருட்டாக இல்லாதபோது, அம்மக்களின் முடிவின் முன் புலிகளும் ஒரு பொருட்டில்லையென இந்த அப்பாவி மனம் நம்புகிறது)
இந்தக் கேள்விகள் வளர்மதியினதுடையது...
(நினைவூட்டல்...
Shoba Sakthi டீசே மேலதிக விளக்கத்திற்காக மறுபடியும் சொல்கிறேன். வளர்மதியின் கேள்விகள் நியாயம் என நீங்கள் கருதும் பட்சத்தில் அந்தக் கேள்விகளோடு உங்களிற்கு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் தயவு செய்து அநதக் கேள்விகளை வெறுமனே கட் அன்ட் பேஸ்ட் செய்து உங்களது கேள்விகளாக வையுங்கள். நான் கண்டிப்பாக பதில் சொல்வேன். பதில்களுக்கு மட்டுமல்ல கேள்விகள் கேட்பவருக்கும் பொறுப்புணர்வு தேவையென்பதாலேயே இந்தக் கோரிக்கை.
November 13, 2010 at 9:31pm )
1. ஒடுக்கப்பட்டோர் விடுதலை – குறிப்பாக, தலித் விடுதலை குறித்து ஒரு தலித் அல்லாத ஆதிக்க சாதியில் பிறந்த நபர் எந்த அளவில் நின்று பேசுவது? தலித்துகளுடைய பிரதிநிதி போலவும், அவர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துவிட்டது போன்ற பாவனையோடும் பேசுவது சரியா? தமிழகத்தில் அ. மார்க்ஸ் இப்படிப் தலித் அரசியல் பேசிய காரணத்தினால்தானே ரவிக்குமார், ”எங்கள் அரசியலை – விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ நடையைக் கட்டு” என்று அ. மார்க்சை ஒதுக்கித் தள்ளினார்? புலம் பெயர் சூழலிலும் அதே போன்று தலித்துகளுடைய பிரதிநிதிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு அதே தவறை செய்வது சரியா?
2. அடையாள அரசியலை நிராகரிப்பதாகக் கூறிய உங்கள் தரப்பு அரசியல் அடையாள அரசியல்தானே செய்கிறது? இது உங்கள் கொள்கைக்கு முரணானதில்லையா?
3. பெரியாரின் தாசர்களாக தம்பட்டமடித்துக் கொள்ளும் நீங்கள் பெரியார் 1930 கள் முதல் தன் வாழ்நாளின் இறுதிவரை வலியுறுத்தியது சாதிய ஒழிப்போடு கூடிய தமிழ் தேசிய விடுதலையைத் தவிர வேறு என்ன? இதை மறுக்கிறீர்களா ஏற்றுக் கொள்கிறீர்களா? மறுத்தால், விளக்க வேண்டும். ஏற்றால், முரண்பாட்டை விளக்க வேண்டும்.
4. இந்தப் பெருங்கதையாடல் என்கிறீர்களே, அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? உங்கள் விளக்கப்படியே பார்த்தால், இந்துத்துவத்துவ பெருங்கதையாடல் என்று சொல்ல முடியுமா?
5. வித்தியாசம் வித்தியாசம் என்கிறீர்களே வித்தியாசத்திற்கும் முரண்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்று சொல்ல முடியுமா?
6. பலஸ்தீனத்திலே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் நீங்கள், ஈழத்திற்கோ தமிழகத்திற்கோ அதை ஏன் நிராகரிக்கிறீர்கள்? பலஸ்தீனத்திலே இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் கடும் மோதல்கள் இல்லையா? ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் மட்டும் அக முரண்பாடுகளைச் சொல்லி விடுதலையை மறுப்பவர்கள், பலஸ்தீனத்திற்கு அதைச் சொல்லாமல் விடுவது ஏன்?
7. காஷ்மீரில் அகமுரண்கள் இல்லையா? அங்கே ‘துரோக’ அமைப்புகளால் எண்ணற்ற உயிர்பலிகள் நிகழவில்லையா? இன்றும் ஆயுதப் போராட்டத்தோடு சேர்த்த அமைதிப் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். அதிலும், உலகிலேயே வலுமிக்க இராணுவங்களுள் ஒன்றை எதிர்த்தல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்? காஷ்மீர் விடுதலையை ஒப்புக்கொள்வதா வேண்டாமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment