எனக்கு ஷோபா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல 'தில்' இருக்கு, இதில் கையெழுத்திட்டு அனுப்ப ஷோபாவிற்கு 'தில்' இருக்கா?)
ஷோபாசக்தி இன்று வெளியிடப்படும் தம்முடைய உட்பட அனைத்து அறிக்கைகளைப் பற்றி எனது கருத்தைச் சொல்லச் சொன்னார். . ஷோபாவிற்கான பிற கேள்விகள் இருக்கின்றன.அது பிறகு.
இது டிசேயாகிய நான் எழுதிய ஓர் அறிக்கை. இதிலுள்ள விடயங்கள் (நான் அவசரத்தில் எழுதியது) திருத்தமாய் எழுதி, பிறவிடயங்கள்ச் சேர்ப்பதாயின் சேர்த்து, செம்மைப்படுத்தி ஷோபாசகதி உட்பட புலம்பெயர்ந்த நாம் அனைவரும் கையெழுத்திட்டு புலம்பெயர் தேசத்திலிருந்து மாநாட்டுக்குப் போகின்ற ஒருவரிடம் 'சர்வதேச மாநாட்டில்' வாசிக்கச்சொல்லிக் கேட்போம். அதேபோன்று இலங்கையில் வெளிவரும் அனைத்து சிங்கள/தமிழ்/ஆங்கில பத்திரிகைகளுக்கும் அனுப்பிப் பிரசுரிக்கச் செய்வோம்)
........................................
நாம் 'சர்வதேச எழுத்தாளர் மாநாடு' நடத்துவதை மிகவும் வரவேற்கின்றோம். இது தமிழர்/முஸ்லிம்கள்/சிங்களவர்/மலையகத்தமிழர் போன்றவ அனைவரும் கலந்துரையாடுவதற்கான முக்கிய கூடல் என்பதுடன், பெரும் போரின்பின் களைத்துப்போன மக்களை இயல்புநிலைக்கு வருவதற்கு உதவும் என்பதிலும் எமக்கு எவ்வித சந்தேகமுமில்லை. எனவே புலம்பெயர்ந்தவர்களாகிய நாம் இம்மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துவதுடன், எமது ஆதரவு உங்களுக்கு என்றும் இருக்கும் என்பதையும் உறுதி செய்கின்றோம்.
மேலும் "அரசியல் உண்மைகளைப் பேசுவதற்கு மாநாட்டில் தடையில்லை" என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கும், அதேவேளை நாம் சிலவிடயங்களைப் பேசுவதற்கான அனுமதியை எங்களுக்குத் தருவீர்களென நம்புகின்றோம்
கடந்த வருடம் வரை நிகழ்ந்த போரினால் பொதுமக்களுக்கு நிறைய உயிர்ச்சேதம், அங்க இழப்புக்கள், சொத்து இழப்புக்கள் உட்பட பெரும் மன உளைச்சல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இப்போர் இரண்டு மிகப்பெரும் ஆயுத அமைப்புக்களான இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்டிருக்கின்றது என்பதை அனைவரும் அறிவர்.
(1) விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்தின்போது பிள்ளைகளைப் பலவந்தமாய்ச் சேர்த்தல், மக்களை வெளியேற விடாமல் தடுத்தமை, அவ்வாறு வெளியேறியவர்களை கடும் சித்திரவதைக்கு உட்படுத்தியது உட்பட பல இடங்களில் தமிழ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொன்றிருக்கின்றார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்கின்றோம். அதேவேளை இலங்கை இராணுவமும் வரலாறு காணாத பெரும் படுகொலைகளை நிகழ்த்தியிருக்கின்றது (அவற்றிற்கான ஆதாரங்களாய் விடீயோக்கள்/ புகைப்படங்கள்/வாக்குமூலங்களை முன்வைத்தல்). எனவே விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களைச் செய்திருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு ஒரு சுயாதீனமான -அரசோ/புலிகளோ சாராத குழு- விசாரணைகளை நடத்த நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
(2) புலிகள் ஒரு 'தீவிரவாத' இயக்கம் என சர்வதேச நாடுகள் பலவற்றால் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இராணுவத்தைக் கொண்டுள்ள இலங்கை அரசானது சனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒரு' தீவிரவாத' இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பல்லாண்டுகளாய் மக்கள் இருந்தபோதும் மக்கள் இப்படிக் கொத்துக் கொத்துக் கொலை செய்யப்படவில்லை. ஆகவே, இறுதிப்போரில் புலிகளுக்கு ஏதேனும் அமாஷ்ய சகதி வந்து தாக்கி தம் மக்களைக் கொத்துக் கொத்தாய் கொண்டிருந்தாலே தவிர, இப்படி மக்கள் கொல்லப்பட்டிருக்கச் சாத்தியமாயிருக்காது. எனவே இறுதிப்போரின்போது கொல்லப்பட்ட மக்களும் அங்கங்களை இழந்தவர்களும் பல்லாயிரக்கணக்கில் இருப்பதால் இராணுவத்தின் பங்கு பெரும்பங்கிருக்கும் என்பதை நாம் அனைவரும் வலியுறுத்துகின்றோம்.
(3) இதேயேன் நாம் குறிப்பிடுகின்றோம் என்றால், புலிகள் ஒரு 'தீவிரவாத' அமைப்பு என்பதைச் 'சரவதேச'மே கூறியிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசு ஒரு ஜனநாயக அரசு. ஜனநாயக அரசானது தனது நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டியது ஓர் அடிப்படை அறம். ஆனால் இங்கே இறுதிப்போரின்போது இலங்கை அரசானது தமிழ்மக்களை தனது மக்களாக எந்தப்பொழுதிலும் ஏற்றுக்கொள்ள்வில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. ஒரு உதாரணத்திற்கு 'தீவிரவாதிகள்' மக்கள் கூட்டமுள்ள பஸ்ஸையோ அல்லது விமானத்தையோ பயணக்கைதியாக்கும்போது ஒரு சனநாயக அரசு தனது மக்களை விடுவிடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டும். முதலில் பேச்சுவார்த்தை நடத்தும், பிறகு தீவிரவாதிகளோடு சமரச முயற்சிகளில் ஈடுபடும். அவையும் இயலாதபட்சத்தில் வன்முறையால் மக்களைப் பாதிப்பின்றிக் காப்பாற்ற முயலும். எந்த ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் தீவிரவாதிகளைக் கொல்லவேண்டும் என்பதற்காய் முழுவிமானத்தையோ பஸ்ஸையோ மக்களுடன் சேர்த்து முற்றாகத் தாக்கி அழிப்பதில்லை. ஆனால் இலங்கை அரசானது தனது சொந்தமக்கள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிந்தும், இவ்வாறு மக்களை விடுவிக்க எந்த ஒரு முயற்சியும் செய்யாது முற்றுமுழுதாக தாக்குதல்களை தீவிரமாக்கிக் கொன்றிருக்கின்றார்கள். மக்களை ஒதுங்கச் சொன்ன பாதுக்காப்பு வலயங்கள் மீதும் மிலேச்சனத்தனமாய் தாக்கியிருக்கின்றார்கள். 'தீவிரவாதி'களான புலிகள் பாதுகாப்பு வலயங்களில் இருந்து தாக்கினார்கள் என்பதற்காய் அதைச் சொல்லி நியாயப்படுத்த முடியாது. 'தீவிரவாதி'கள் அதைத்தான் செய்வார்கள், இல்லாவிட்டால் நாம் ஏன் தீவிரவாதிகள் என அவர்களைச் சொல்ல வேண்டும். ஆக 'தீவிரவாதி'களான புலிகள் ஒளிந்திருந்ததால்தான் இப்படித் தாக்குதல் செய்தோம் என்று இலங்கை அரசு கூறுமாயின் இலங்கை அரசும் தீவிரவாத முறைகளைத்தான் பயன்படுத்தியிருக்கின்றது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவேண்டும்.
(4) ஆகவே மேற்கூறிய காரணங்களால் இராணுவமும் புலிகளைப் போன்று போர்க்குற்றஞ்களைப் புரிந்திருக்கின்றது. இந்த இராணுவத்தின் முப்படைத்தளபதியாக அதிவணக்கத்திற்குரிய மேன்மை தங்கிய மகிந்தா இராஜபக்சாவே இருக்கின்றார். ஆகவே அவரையே நாம் முதற் குற்றவாளியாக அடையாளங் காண்கின்றோம். அவரைச் சர்வதேச நீதிமன்றத்த்தின் முன்னிறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.
(5) இன்று சரணடைந்த 10, 000 ற்கு மேற்பட்ட புலிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்வதை நாம் மிகவும் வரவேற்கின்றோம். அதே சமயம் சரணடைந்த புலிகளின் முக்கிய பொறுப்பானவர்கள் பற்றிய செய்திகள் எதையும் சனநாயக இலங்கை அரசானது போர்முடிந்து 1 வருடமாகியும் வெளிப்படையாகக் கதைக்கவில்லை. அவர்களைப் புலிகளின் போர்க்குற்றங்களுக்காய் தடுத்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கவும் செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டதற்கு ஒரு 'நியாயம்' இருப்பது போல, போர்குற்றங்களைச் செய்ய இராணுவ தளபதிகள், பிறர் எவ்வாறு ஒரு சனநாயக நாட்டில் சுதந்திரமாக நடமாட முடிகின்றது? என்ற கேள்வியை நாம் முன்வைக்கின்றோம்.
(6) போரின் பின்பாய் மக்கள் மீள குடியமர்த்தபடுவதை நாம் வரவேற்கும் அதேவேளை அவர்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான அடிப்படை வசதிகளையாவது இந்த சனநாயக அரசு செய்யவேண்டும். ஆனால் அரசானது புலம்பெயர் தமிழரிடம் உதவி செய்யுங்கள் எனக் கோரிக்கை விடுவதோடு அம்மக்கள் மீது அக்கறை கொள்ளாதிருக்கின்றது. இதே அரசானது பிற சிங்கள் பிரதேசங்களிலும் அபிவிருத்தி செய்யத்தான் செய்கின்றது. ஆனால் அவ்வாறான அபிவிருத்தி நிகழும்பொது 'புலம்பெயர் சிங்கள மக்களே' உதவுங்கள் என எந்த கோரிக்கையையும் வைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஆக இதிலிருந்து தமிழ் மக்களை இலங்கை அரசானது தனது நாட்டின் மக்களாகக் கொள்ளாமல் இருக்கின்றது என்றோ அல்லது இரண்டாம்பட்சமாகக் கருதிக்கொள்கிறதோ என்கின்ற முடிவுக்கு நாம் வரமுடியுமா?
(7) இன்று வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியே நிகழ்கின்றது. இராணுவம் முற்றுகையிட்டிருக்கின்ற நகரங்கள் ஒருபோதும் இயல்புநிலைக்குத் திரும்புவதேயில்லை. எந்த ஒரு சனநாயக நாட்டிலும் இப்படி இராணுவம் அடர்த்தியாகச் சூழ்ந்திருப்பதில்லை. அவ்வாறிருந்தால் அவை ஒரு போர்ப்பிரதேசமாகவோ அன்றி இராணுவ ஆட்சியாகவோ இருக்கும். இன்று முற்றாக இலங்கையில் போர்சூழல் இல்லாத நிலையில் தமிழர் பிரதேசங்களில் இருந்து முற்றுமுழுதாக இராணுவம் அகற்றப்படவேண்டும் என்று கோருகின்றோம் ( நாம் சிங்களப் பிரதேசங்களுக்குப் போகும்போது இவ்வாறான இராணுவ முகாங்களையோ காப்பரண்களையோ, இராணுவீரர்களையோ பார்ப்பதில்லை என்பதை ஓர் உதாரணத்திற்குக் கூறுகின்றோம்)
(8) இன்று தமிழ்ப்பிரதேசங்களில் பலவந்தமான குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. புதிய புதிய புத்த விகாரைகள் எழும்பிக்கொண்டிருக்கின்றன. எந்த இன மக்களும் நாட்டின் எங்கு செல்லவும் எங்கேயும் வாழ்வதற்கான உரிமைகளை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் பலவந்தமான குடியேற்றங்கள் ஒருபோது இன நல்லிணக்கத்தைத் தரப்போவதில்லை. அவை இனங்களிடையே காழ்ப்புணர்வையே ஏற்படுத்தச் செய்யும். தமிழர்கள் ஆரம்பகாலப் போராட்டக்காரணிகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கின்றது. அன்றே அன்றைய அரசுக்கள் இது மீது கவனஞ்செலுத்தியிருந்தால் இவ்வகையான மிகப்பெரும் அழிவுகளுக்கு நாம் வந்திருக்கமுடியாது. ஏற்கனவே செய்த பிழையைத் திரும்பவும் செய்யும்போது இது ஒரு அரசின் அசமந்தப் போக்கு எனவே எடுத்துக்கொள்கின்றோம். தென்பகுதியில் தமிழ்மக்கள் உரிய வகையில் குடியேறியதைப் போல சிங்கள்மக்களோ பிறரோ குடியேறுவதை நாம் மிகவும் வரவேற்கின்றோம்.
(9) வடமாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் உட்பட 80களில் வாழ்ந்த சிங்கள் மக்கள் வரை அனைவரும் திரும்பி வாழ்வதறகான் சூழலும் இந்தளவு கால இழப்புக்கான நஷ்ட ஈடுகள் வழங்கப்படவேண்டும் எனவும் எமது முக்கிய கோரிக்கையாக முன் செய்கின்றோம். மேலும் இன்றும் யாழ் வலி வடக்கில் பெரும்பாலான பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாய் (கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாய்) இருப்பதை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம். ஆனால் அரசானது இதில் பிடிவாதமாய் இருப்பதுடன் அண்மையில் கிழக்கில் சம்பூரைக் கூட உயர் பாதுகாப்புப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியிருபதைக் கண்டிக்கின்றோம். ஏற்கனவே மேலே நாம் வலியுறுத்திக் கூறிய 'இயல்புவாழ்க்கைக்கு திரும்புவதற்கு இராணுவம் அகற்றப்படல் அவசியம்' என்பதை ஒரு அரசானது கவனத்தில் கொண்டால் இவ்வாறான உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு தேவையேயிருக்காது. ஒரு சனநாயக நாட்டில் அரசோ இராணுவமோ மக்களுக்குரியதானதே. அவர்களின் வரிகளின் மூலமே இவ்வகையான அமைப்புக்கள் இயங்குகின்றன என்பதை நாம் நினைவுபடுத்துகின்றோம்.
(10) இன்று இலங்கையில் ஊடகங்களுக்கான சுதந்திரம் இல்லை என்ற குரல்கள் பல மட்டங்களிலிருந்து எழுகின்றன (கொல்லப்பட்டவர்கள் / காணாமற்போனார்/ அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்களை இங்கே பட்டியலிடுதல்). ஒரு சனநாயக நாட்டில் பத்திரிகை சுதந்திரத்துடன் இயங்குதல் இன்றியமையாதது. முக்கியமாய் ஒரு அரசு எவ்வாறு இயங்குகின்றது, எந்தத்திசையில் போகின்றது என்பதை மதிப்பீடு செய்வதை ஊடகத்துறை தவிர்ந்த வேறு எந்தத்துறையாலும் செய்யமுடியாது. ஆனால் இலங்கையில் தாம் விரும்பியதை எழுத ஊடகங்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோ முடிவதில்லை. சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் பங்குபெறும் புலம்பெயர் தேசத்தவர்களாகி நாம், எங்களுக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் பேசுவதற்கு/எழுதுவதற்கு/கருத்தாடல் செய்வதற்கு இருக்கும் சுதந்திரம் போன்று அனைத்தும் இலங்கைப் படைப்பாளிகளுக்கும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம். நாம் எமது கருத்து எதுவாயினும் எழுதிவிட்டு தெருவில் எந்த நேரத்திலும் கொல்லப்படமாட்டோம் என்று அச்சமின்றி நடமாடுவதைப் போல இலங்கையில் ஓர் சூழல் உருவாக வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த அறிக்கையை சர்வதேச மாநாட்டில் வாசிக்க, ஷோபாவுடன் அறிக்கை தயாரித்த இராகவனே பொருத்தமான நபர் என நினைக்கின்றேன். ஷோபாவையே அனுப்பிப் பேசச்சொல்லலாம். அவருக்கு விஸா பிரச்சினை இருக்கும். இராகவன் ஏற்கனவே 2 முறை இலங்கை போய்விட்டார். எனவே அவருக்குப் பிரச்சினை இருக்காது. மற்றது எமது பிரசினை பற்றிய அதிக அறிந்தவரும் அனுபவத்தில் கூடியவரும் கூட.
இதை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் நாம் மட்டுமே செய்வோம். தமிழக நண்பர்களும் வேண்டாம். முக்கியமாய் ஈழத்தில் இருப்பவர்கள் எவரும் கையெழுத்திட கேட்கவேண்டாம். அவர்களது பாதுகாப்பு உயிர்வாழ்தலே நமக்கு முக்கியம்.
இதில் நாம் லெ.முருகபூபதி, நோயல் நடேசன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், பத்மநாப ஜயர், காலம் செல்வம், தேவதாசன், ஸ்ராலின், ஷோபாச்கதி, ராகவன் போன்றவர்களை முக்கியமாய் உள்ளடக்கவேண்டும். எனெனில் இவர்களே அறிக்கைப் போர்கள் நடத்திக்கொண்டிருப்பவர்கள்)
Saturday, February 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment